Sunday, May 17, 2009

வர்மமும் யோகமும்


நமது முன்னோர்கள் பயன்படுத்திய ஆயகலைகளுள் வர்மக்கலையும் ஒன்று . யோகக் கலையை முறையாக பின்பற்றுவதன் மூலமே வர்மக்கலையில் நிபுணத்துவம் பெற முடியும் . இன்றைய காலகட்டத்தில் சமூக ஒழுக்கம் மற்றும் சமூக அமைதி நிலைநாட்ட யோகக்கலை ஒன்றே சிறந்த வழி . வர்மக்கலையின் பொருளும் சிறப்பம்சமும் அறிய யோகக்கலயைபற்றி அறிவுத்திறன் வேண்டும் .இதைபற்றி நமது முன்னோர்களான தொல்காப்பியர் மற்றும் தாயுமானவர் கூறிய கருத்துகளைக் காண்போம் .



ஆறுவகை உயிர் பாகுபாடு


உற்றால் அறிவதாகிய உடம்புணர்ச்சி யொன்றேயுடையது ஓரறிவுயர் . பரிசவுணர்ச்சியாகிய அதனோடு சுவையறிதலாகிய நாவுணர்வும் உடையது ஈரரிவுயிர். இவ்விரண்டுடன் மூக்கினால் முகர்ந்தறிதலாகிய நாற்றவுணர்ச்சியும் உடையது மூவறிவுயிர் இம்மூவகை உணர்சியுடன் கண்களாற் கண்டறிதலாகிய ஒளியுணர்ச்சியும் பெற்றது , நாலறிவுயிர். இந்நால் வகையுணர்வுடன் ஒசையறிதலாகிய செவியுணர்வும் வாய்க்கப் பெற்றது ஐயறிவுயிராகும். மேற்க்கூறிய ஐம்பொறியுணர்வோடு உய்த்துணர்வாகிய மனவுணர்வும் பெற்று விளங்குவது ஆறறிவுயிராகும் .


இதனை தொல்காப்பியத்தில்


" ஒன்றறி வதுவே உற்றறி வதுவே


இரண்டறி வதுவே அதனொடு நாவே


மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே


நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே


ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே


ஆறறி வதுவே அவற்றொடு மனனே


நேரிதின் உணர்ந்தோர் நெறிபடுத் தினரே "



என்று தொல்காப்பியர் கூறியுள்ளார் .


ஒவ்வொரு அறிவுக்கும் பொருள் கூறியுள்ள தொல்காப்பியர் ஆறாம் அறிவை பற்றி


" மக்கள் தாமே ஆறறி வுயிரே


பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே "


என்று கூறியுள்ளார் .


மேற்கூறிய பாடல்களில் மனிதன் ஆறாம் அறிவுடையவன் என்பதும் , மனம் ஆறாம் அறிவு என்பதும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதனை நன்றாக உணர்ந்தவர்கள் மனதை நெறிப்படுத்தி வாழ்ந்தனர் .



இந்த வாழ்வியல் தத்துவத்தை தொல்காப்பியர்


" ஆறறி வதுவே அவற்றொடு மனனே


நேரிதின் உணர்ந்தோர் நெறிபடுத் தினரே "


என்ற வரிகள் மூலம் தெளிவுபடுத்துகிறார்.



போகமும் யோகமும்


உயிர்கள் அனைத்தும் ஐம்பொறிகள் மூலமாகப் பெறுகிற பேறு போகம் எனப்படும்.இதற்க்கு நேர்மாறாக யோகம் என்பதும் உள்ளது. யோத்தின் மூலம் பெறுகிற இன்பம் நிலையற்றது . யோகத்தின் மூலமாகப் பெறுகிற இன்பம் நிலைத்திருக்கிறது.


ஐம்பொறிகளின் செயலின்றி போகம் இல்லை . ஐம்பொறிகளின் செயலைத் தடுப்பது யோகம் . யோகம் பெரும் சாதனங்கள் பல உள்ளன , அவைகளுள் பிராணவாயுவின் செயலை ஒழுங்குபடுத்துவது மிக முக்கியமானது .


எரிகின்ற தீபத்துக்கு எண்ணெய் ஒழுங்காக வந்துகொண்டிருக்கவேண்டும் . அதிகமா எண்ணெய் வந்தால் ஒருவேளை அது விளக்கையே அனைத்து விடலாம் . அல்லது விரைவில் எரிந்து விரயமாய் போய்விடலாம் . எண்ணெய் குறைபட்டு வந்தால் விளக்கானது வேண்டிய அளவுக்கு ஒளி விடாது . அளவெடுத்து வருகிற எண்ணையானது விளக்கை நன்றாக எரியச் செய்கிறது .


உடல் வாழ்வு விளக்கு எரிதலுக்கு நிகரானது . பிராணன் அதற்கு எண்ணெய் போன்று பயன்பட்டு வருகின்றது . இந்த பிராணனுடைய போக்குவரத்தைப் பிராணயாமத்தின் மூலம் சரியாகப் பற்றிப் பிடித்துப் பயன்படுத்துவது நல்ல யோகா சாதனமாகிறது. அப்படி யோகா சாதனம் செய்கின்றவர்களே உடல் வாழ்வை நன்கு வாழ்ந்து வருகின்றனர் .


யோகியர்கள் அனுபவிக்கின்ற பரம சுகத்தை போகியர்கள் அனுபவிப்பதில்லை . அந்த அளவிற்கு உயிர்வகைகளுள் யோகியர்கள் போகியர்களைவிட மேன்மையானவர்கள் ஆகின்றனர் . பிராணனைப் பிடித்து லயப்படுத்துவதின் மூலம் மரணத்தையே பெரிதும் வென்றவர்களாக யோகியர்கள் திகழ்கின்றனர் .


நீண்ட வாழ்வும் நிலைத்த சுகமும் பெறுவதற்கு யோகம் சிறந்த சாதனம் என்றல் அதை ஏன் கைப்பற்றலாகாது? . அதை கைப்பற்றுகிறவர்கள் பிரபஞ்சத்தில் ஒரு சிலர் இருக்கின்றனர் . அவர்களைக் குறித்து " பற்றிப்பிடிக்கும் யோகப் பாங்கில் பிராண லயம் என்னும் ஒரு பூமி " என்று தாயுமானவர் இயம்புகின்றார் .


(Ref:1.TOLKAPPIYAM KAATTUM VAAZHKKAI, 4th EDITION - 2002,PAZHANIYAPPA BROTHERS. 2. THAYUMAANAVAR IYATTRIYA SUGAVAARI, 1963, THAPOVANA PRASURALAYAM.)

Tuesday, May 5, 2009

வர்மம் பற்றிய முதல் தமிழ் இணையதளம்




" உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க

வேண்டா உடன் பிறந்தே கொல்லும் வியாதி

- வர்மம் "